நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள நாங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி அருமைகண்ணு (70). இவருக்கு ராகவன், வீரமணி என்ற இரு மகன்கள் இருக்கின்றனர்.
இவர் அரசின் மூலம் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகையை வைத்து குடும்பம் நடத்திவருகிறார். இவரது கணவர் கலியபெருமாள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்நிலையில் தனது இரண்டாவது மகன் வீரமணி வீட்டில் வசித்துவந்த அருமைகண்ணுவுக்கும், அவரது மருமகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தனது மகன் ஏதும் கேட்கவில்லை என்று மனமுடைந்த அருமைகண்ணு, அரளி விதையை அரைத்து குடித்துவிட்டு நாங்கூர் பகுதியிலுள்ள புளியமரத்தடியில் படுத்துக் கிடந்துள்ளார்.
இது தொடர்பாக அப்பகுதி வாசிகள் மகன் வீரமணியிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நேரில் சென்று தாயை வீட்டிற்கு தூக்கிச் சென்றுள்ளார். அப்பொழுது அருகில் இருந்தவர்கள், மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல அறிவுறுத்தியுள்ளனர். அதனை ஏற்க மறுத்து வீரமணி தாயை வீட்டிற்கு தூக்கிச் சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து வீட்டிற்கு கொண்டுசென்ற அருமைகண்ணு விடியற்காலையில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து திருவெண்காடு காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதனிடையே அருமைகண்ணு மயங்கிக் கீழே விழுந்து கிடந்தபோது, காணொலி வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், “எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் என்னைக் கண்டுகொள்ளவில்லை. அதில் ஒரு மருமகள் அடிக்கடி என்னை துன்புறுத்துகிறார். அதனால் மனமுடைந்து அரளி விதையை அரைத்துக் குடித்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார். இந்தக் காணொலி தற்போது வைரலாகிவருகிறது.
இதனையடுத்து அவர் அளித்த இந்த வாக்குமூலத்தை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மருமகள் கொடுமையால் மாமியார் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க...கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி: 9 மாதங்களுக்குப் பின்பு போலீஸ் விசாரணையில் சிக்கினார்