மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி, மார்க்கண்டேயருக்காக எமனை சம்ஹாரம் செய்ததால் இத்தலம் அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
இந்தக் கோயிலில் பக்தர்கள் சிறப்பு ஹோமம் செய்து சுவாமி, அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புமிக்க கோயிலில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது 60 வயது பூர்த்தி அடைந்து 61வது வயது தொடங்குவதை முன்னிட்டு, சஷ்டியப்த பூர்த்தி எனப்படும் மணிவிழாவை கொண்டாடினார்.
விழாவை முன்னிட்டு நேற்று மாலை கோயிலுக்கு வந்த சேகர் பாபு, அவரது மனைவி சாந்தி ஆகியோருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற தம்பதி சமேதராக கோபூஜை, கஜ பூஜை செய்தனர். பின்னர் கோயிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் நடைபெற்ற முதல் கால யாக பூஜையில் கலந்து கொண்டார். தொடர்ந்து இன்று காலை சஷ்டியப்த பூர்த்தி இரண்டாம் கால சிறப்பு யாகம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு, அவரது மனைவி சாந்தி ஆகியோருக்கு கலசபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். சஷ்டி அப்த பூர்த்தி விழாவை முன்னிட்டு, அமைச்சர் சேகர்பாபுவுக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் ஆதின கட்டளை ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் தலைமையில் ஆதீன கோயில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி, கோவில் உள்துறை விருதகிரி ஆகியோர் பிரசாதங்களை வழங்கினர்.
மேலும் வைத்தீஸ்வரன் கோயில், திருமணஞ்சேரி உள்ளிட்ட கோயில்களில் இருந்து பிரசாதங்களை கோயில் சிவாச்சாரியார்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் முத்துராமன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: டிடிஎஃப் வாசனின் வாகன ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து - போக்குவரத்து துறை அறிவிப்பு!