மயிலாடுதுறை: சீர்காழி தாலுக்கா, மேலையூரில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.
இக்கல்லூரியில் உள்ள பழைய கட்டடங்களை புதுப்பிப்பது, நவீன உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது ஆகியவை குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (ஜூலை.11) ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கல்லூரி பேராசிரியர்களின் தேவை குறித்து கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, "முதலமைச்சரின் உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரிகளை ஆய்வு செய்து வருகிறோம். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேவைப்பட்டால் கூடுதல் கட்டடங்கள், நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும்.
காலியாக உள்ள பேராசிரியர்கள் பணிக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். சிதம்பரம் தீட்சிதர்கள் நடவடிக்கை குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை செய்துள்ளோம். அவர்கள் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்த ஆய்வின்போது, பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா முருகன், சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம், அறநிலையத் துறை அலுவலர்கள், கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: கொங்கு நாட்டுக்கு குறி: திமுகவில் ஐக்கியமாகும் தோப்பு வெங்கடாசலம்