இந்தியாவிலேயே தொன்மையான மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன திருமடத்தில், 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு தருமபுரம் ஆதீன கோயிலான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் பிரசாதத்தை வழங்கி தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் அருளாசி வழங்கினார். இந்த சந்திப்பு அரைமணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
ஆதீனத்தை சந்தித்து அருள் ஆசி பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,”இந்தச் சந்திப்பு மனநிறைவைத் தருகிறது. பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாத கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த தமிழ்நாடு முதலமைச்சரிடம் வலியுறுத்தவுள்ளேன். கோயில் புனரமைப்பு குறித்து சுவாமிகளுடன் உரையாடினேன்”என்றார்.
முன்னதாக, மயிலாடுதுறையில் வேறு ஒரு நிகழ்ச்சியில் நேற்று (நவ.24) காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுகவினர் வழிபாட்டுத் தலங்களுக்கு உண்மையான பக்தியுடன் சென்று வழிபடுவதாகவும், திமுகவினர் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் இந்துக்களின் வாக்குகளை கவரவே ஆன்மீக தலங்களுக்கு செல்வதாகவும் கூறினார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பரப்புரை பயணத்தின்போது தருமபுரம் ஆதீனம் சென்று ஆசி பெற்றது வாக்கு அரசியல் எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றஞ்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மேலும் கூடுதல் இடங்கள்? அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்