மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் கடல் மீன்வளத்தைப் பாதுகாக்கும் வகையில், கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு முறைச்சட்டம் 1983 மற்றும் திருத்திய விதிகள் 2020-ன் படி, ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் ஜீன் மாதம் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இக்காலகட்டம் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலகட்டம் என்பதால், மீன்வளத்தைப் பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் வருகின்ற 15ஆம் தேதியிலிருந்து துவங்க உள்ளது. எனவே, திருவள்ளுவர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பது தடைசெய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மண்பாண்டம் தயாரிப்பிற்கான மண் எடுக்க விரைவில் எளிய முறையில் அனுமதி - அமைச்சர் துரைமுருகன்
எனவே, கடல் வளத்தைப் பாதுகாக்கும் வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, பூம்புகார், பழையாறு, திருமுல்லைவாசல், சந்திரபாடி, குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, வானகிரி, குழையார், கொடியம்பாளையம் உள்ளிட்ட 28 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள், வருகின்ற 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை, அதாவது 61 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: பூர்வகுடிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கிறதா அரசு? - லூப் சாலை ஆக்கிரமிப்பின் பின்னணி என்ன?