நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தைச் சேர்ந்த கருப்பு நித்யானந்தம் (50) என்பவர் துணிக் கடை வியாபாரம் செய்துவருகிறார். அமமுக கட்சியைச் சேர்ந்தவராவார்.
இவருடைய மகன் முகேஷ்கண்ணன் (20). இவரும் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்துவந்தனர். இருவரும் ஒன்றாக ஐ.டி.ஐ. படித்தபோது இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு, பின் காதலித்து வந்துள்ளனர்.
படித்து முடித்த பிறகு இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒன்றாக வேலைபார்த்து வந்தனர். இவர்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.
மகன் காதலிப்பதை கருப்பு நித்யானந்தம் விரும்பாததால், காதலைத் துண்டிக்க ரகசியமாகத் திட்டமிட்டுள்ளார். அதன்படி தனது மகனின் காதலி வீட்டுக்குச் சென்று அந்தப் பெண்ணைத் தனியாகச் சந்தித்துள்ளார். தன்னுடன் வந்தால் தன்னுடைய மகனுடன் திருமணம் செய்துவைப்பதாக அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.
கருப்பு நித்யானந்தாவின் வார்த்தையை நம்பிய அப்பெண் அவருடன் சென்றுள்ளார். ஆனால் கருப்பு நித்யானந்தம் தான் திட்டமிட்டபடி, அப்பெண்ணை செம்போடை பகுதிக்கு காரில் கடத்திச் சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள ஒரு கடையில் வைத்து, மிரட்டி தாலி கட்டிய அவர், அப்பெண்ணை பாலியல் வன்புணர்வும் செய்துள்ளார்.
இதையடுத்து அப்பெண்ணை செம்போடை அருகே உள்ள அவரிக்காடு கிராமத்தில் ஒருவருடைய வீட்டில் அடைத்துவைத்து துன்புறுத்தியுள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண் அந்த வீட்டிலிருந்து தப்பிச்சென்று வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கருப்பு நித்யானந்தத்தின் மீது புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், கருப்பு நித்யானந்தம் அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தது உறுதியானது. மேலும் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட அவரிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (47) என்பவரும், அவரது மனைவி பவுன்ராஜவள்ளியும் (38) அடைக்கலம் கொடுத்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கருப்பு நித்யானந்தம், சக்திவேல், பவுன்ராஜவள்ளி ஆகிய மூன்று பேரையும் கைதுசெய்து வேதாரண்யம் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தினர். பின்னர் மூன்று பேரையும் 15 நாள்கள் காவலில் வைக்க வேதாரண்யம் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: நான்கரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது