புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் நாளுக்கு நாள் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது அரசு ஊரடங்கில் பெரும் தளர்வுகளை அறிவித்து வருவதால் தொற்றின் தாக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை ஒன்பதாயிரத்து 51 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில், ஆயிரத்து 23 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 798 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 65 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் 117 பேர் வீட்டிலேயே சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 21 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். காரைக்கால் மாவட்டம் முழுவதும் பரவலாக கரோனா தொற்றின் தாக்கம் உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.