மயிலாடுதுறையை அடுத்த பல்லவராயன்பேட்டையில் நரிக்குறவர் காலனி அமைந்துள்ளது. இங்குள்ள நரிக்குறவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியே சாமி சிலைகள் வெள்ளியில் அமைக்கப்பட்டு, அவற்றை குலதெய்வமாக அவர்கள் வழிபடுவது வழக்கம். இந்த சிலைகளை வைத்து தான் அவர்கள் திருமணத்தின் போது பெண் எடுப்பார்கள்.
இதுபோல் அங்கு வசிக்கும் ஆனந்தன் என்பவர், குடும்பத்திற்கு சொந்தமான 11 சாமி சிலைகள் மற்றும் ஒரு புல்லாங்குழல் ஆகியவை பூஜிக்கப்பட்டு வந்ததாகவும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, இந்த சாமி சிலைகளை விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த துரைக்கண்ணு, சேகர், பிரபு, ரஜினி ஆகிய நான்கு பேர் மூட்டையுடன் திருடிச் சென்றதாகவும் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
புகாரின் பேரில் மயிலாடுதுறை கிரைம் போலீசார் விசாரணை செய்து, செஞ்சியில் இருந்து சுவாமி சிலைகளை கைப்பற்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் கைப்பற்றப்பட்ட சுவாமி சிலைகளை இன்று பல்லவராயன்பேட்டை ஆனந்தன் குடும்பத்திடம் காவல்துறையினர் ஒப்படைக்க இருந்தனர்.
இதுகுறித்து கேள்விப்பட்ட செஞ்சியைச் சேர்ந்த நரிக்குறவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக சேலம், உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நரிக்குறவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் போலீசார் கைப்பற்றி வந்த சாமி சிலைகள் நரிக்குறவர் சமுதாய மக்களின் பொது சொத்து என்று கூறி மயிலாடுதுறை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதனைத்தொடர்ந்து மயிலாடுதுறையை சேர்ந்த நரிக்குறவர்களுடன் செஞ்சி மற்றும் பிற பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர்களுக்கும் காவல்நிலையம் முன்பு வாய்தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் இரண்டு தரப்பையும் சமாதானம் செய்தனர். தொடர்ந்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு சிலை ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தனர்.
காவல் நிலையம் முன் நரிக்குறவர்கள் தங்களது மொழியில் ஒருவரை ஒருவர் தாக்கி நையாண்டி செய்து திட்டி வாக்குவாதம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மற்றும் செஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நரிக்குறவர்கள் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் திரண்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டு இருதரப்பு முக்கியஸ்தர்களிடையே சிலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.