நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மறையூரில் உள்ள நியாய விலைக்கடையில் 350க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.
இன்று மண்ணென்ணெய் வாங்க மழை என்றும் பாராமல் மக்கள் கட்டுக்கடங்காத கூட்டம் நியாய விலைக்கடையில் அலைமோதியது. இதனால் பொதுமக்கள் இடையே வாக்குவாதமும், சலசலப்பும் ஏற்பட்டது. அவ்வழியே காரில் வந்த மயிலாடுதுறை தாசில்தார் முருகானந்தம் கூட்டத்தைப் பார்த்து விசாரிக்க கீழே இறங்கினார். ஆனால் அவரால் சமாளிக்க முடியாமல் போகவே, அங்கிருந்து சென்றார். ஒரு கட்டத்தில் மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் நியாய விலைக்கடை ஊழியர் கடையை இழுத்து மூடிச்சென்றுள்ளார்.
இது குறித்து அந்த மக்கள் தெரிவிக்கையில், "வழக்கமாக மாதம் தோறும் மூன்று லிட்டர் மண்ணென்ணெய் வழங்கிவந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டு அரை லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் அது அனைவருக்கும் வழங்கப்படவில்லை என்றும் முதியோரால் வரிசையில் நின்று மண்ணென்ணெய் வாங்க முடியாமல் புலம்பியபடியே சென்றதாகவும் இதனால் ரேஷன் பொருட்கள் தங்குதடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.