மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த கொண்டல் வடக்கு தெருவைச் சேர்ந்தவர், ரெட் தினேஷ் என்கிற தினேஷ் (27). ரவுடியான இவர் மீது சீர்காழி, புதுப்பட்டினம், செம்பனார்கோவில் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் இருந்த தினேஷ் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி காரில் சுற்றித் திரிந்த ரெட் தினேஷ் கோவில்பத்து பள்ளிக்கூடம் அருகே காரில் வந்தபோது இரண்டு டூவீலர்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், காரை வழிமறித்து, தினேஷை ஓட ஓட அரிவாளால் விரட்டி வெட்டியதுடன், உருட்டுக் கட்டையாலும் தாக்கி விட்டு தப்பியோடினர்.
பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய தினேஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தினேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் தப்பி ஓடிய மர்ம கும்பலைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, மூன்று தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில், முக்கிய குற்றவாளியான அதே பகுதியைச்சேர்ந்த அரவிந்தன், சார்லஸ், மணிகண்டன், முகேஷ், சிலம்பரசன் ஆகிய ஐந்து பேரை தனிப்படையினர் கைது செய்தனர்.
மேலும் அம்மாயி என்கின்ற பாரதி, கீர்த்திகரன் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் சீர்காழி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். மேலும் அரவிந்தன், தினேஷ் இருவரும் நண்பர்கள், கொலை வழக்கு ஒன்றில் தினேஷை, அரவிந்த் மாட்டிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் அரவிந்த் வந்த காரை பிடிங்கி, வைத்துக்கொண்டு, அந்த காரில் சுற்றி வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் தினேஷை மிரட்டுவதற்காக நான்கு பேரை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த அரவிந்தன் மற்றும் அவரது நண்பர்கள், தினேஷை வழிமறித்து கை மற்றும் கால் பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் ரத்தம் அதிகளவு வெளியேறியதால் தினேஷ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க:Tunisha Sharma: காதலனுக்கு பல பெண்களுடன் தொடர்பு.. துனிஷா மரணத்தின் முழு பின்னணி?