மயிலாடுதுறை: சம்பா அறுவடைப் பணிகளில் விவசாயிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லைக் கொள்முதல் செய்வதற்காக மாவட்டம் முழுவதும் 150 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இவற்றில், இதுவரை 60 சதவீத நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டு கடந்த ஒருவாரமாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
குத்தாலம் தாலுகா, தேரழுந்தூரில் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இங்குள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் இதுவரை திறக்கப்படவில்லை. இங்குள்ள விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த சுமார் 40 மெட்ரிக் டன் நெல்லினை கொள்முதல் நிலையம் முன்பு குவித்து வைத்துள்ளனர். மேலும், இன்று காலை பெய்த மழையில் நனையாமல் பாதுகாக்க நெல்லினை தார்பாய் கொண்டு மூடி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
மேலும், ஓரிரு நாள்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், உடனடியாக கொள்முதல் நிலையத்தை திறந்து கொள்முதலை தொடங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால், நெல்லின் ஈரப்பதத்தை 20 சதவீதமாக தளர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: Budget 2023: வேளாண் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க கடன் திட்டம்!