மயிலாடுதுறை: மயிலாடுதுறை சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தினசரி மயிலாடுதுறை நகருக்கு பேருந்து மூலம் வந்து செல்கின்றனர்.
இதில் சில உள் கிராமங்களுக்கு ஓரிரு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் தொங்கியபடியே பயணம் செய்வது வாடிக்கையாக உள்ளது.
கட்டுப்படுத்த முடியாத கூட்டத்தினால் ஓட்டுநர் எரிச்சல்:
மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு வழியாக பாப்பாகுடி சென்ற அரசுப் பேருந்தில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்துள்ளது. இதனால் மாணவர்கள் படிகளில் தொங்கியபடியே பயணித்துள்ளனர்.
அவர்களை உள்ளே நிற்கச் சொல்லி, ஓட்டுநர் பலமுறை எச்சரித்தும், மாணவர்கள் தொங்கியபடியே சென்றுள்ளனர். இதனால் பேருந்தை இயக்க முடியாமல் சிரமமடைந்த பேருந்தின் ஓட்டுநர் ஆத்திரமடைந்து அரசுப் பேருந்தினை நடு ரோட்டிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்புலன்ஸ் செல்ல இயலாமல் சிக்கிக்கொண்டது:
அரை மணி நேரம் சாலையிலேயே நின்றுகொண்டிருந்த பேருந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் நெரிசலில் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டது. பின்னர், வெகுநேரம் கழித்து அங்கு வந்த ஓட்டுநர் பேருந்தினை எடுத்து சாலையின் ஓரமாக நிறுத்தினார்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல் துறை பேருந்தை இயக்கும் படி கூறியதால் ஓட்டுநர் பேருந்தை இயக்கிச் சென்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டதற்கு மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் ’பீக் ஹவர்ஸ்’ எனச் சொல்லப்படும் காலை மாலை வேலைகளில் கூடுதல் பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.