மயிலாடுதுறை மாவட்டம், வில்லியநல்லூரில் குறுவை சாகுபடி பணிகள் குறித்து வேளாண்மைத் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "மேட்டூரில் ஜுன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவதால், காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விவசாயத்துக்குத் தேவையான குறுகிய கால நெல் ரகங்கள் வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 3,500 மெட்ரிக் டன் விதைகள் வழங்கப்பட்டுள்ளன. 3,000 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. யூரியா, டிஏபி, பாஸ்பேட் போன்ற உரங்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. உயிர் உரங்கள் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. சமுதாய நாற்றங்கால் அமைத்து நாற்றுகளை உற்பத்தி செய்து மற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
டிஏபி தயாரிப்பு நிறுவனங்கள் மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக விலையை ஏற்றின. ஆனால், இதில் மத்திய அரசு தலையிட்டு பழைய விலையான ரூ.1,200க்கு விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், அந்தக் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்.
சென்ற ஆண்டு குறுவை சாகுபடிக்கான காப்பீட்டுத் தொகை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மொத்தம் 84 கோடி ரூபாயில் இதுவரை 35 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளன. 10 நாட்களில் மீதி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பா பருவத்திற்கான தொகை ஜுலை மாதத்திற்குள் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு நிவர், புரெவி புயல்கள் காரணமாக, தவறிய மழையால் ஏற்பட்ட பாதிப்பு நிவாரணமாக, அரசு வழங்கிய 1,715 கோடி ரூபாயில் 1,586 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: நெல்லை மாவட்டத்தில் 4ஆவது நாளாக கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு!