மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கி.பி.1620ஆம் ஆண்டு டேனிஷ் நேவி கேப்டன் ரோலண்ட் கிராப் தரங்கம்பாடி சுற்றுப்புறத்தை, தஞ்சை மன்னர் ரெகுநாத நாயக்கரிடம் விலைக்கு வாங்கி தரங்கம்பாடி கடற்கரையில் டேனிஷ் கோட்டையை கட்டினார். அதன் பின் 1845ஆம் ஆண்டு தரங்கம்பாடி டேனிஷ் அரசால் ஆங்கிலேயரிடம் விற்கப்பட்டது. 1947-இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மத்திய அரசின் பொறுப்பில் இருந்த இக்கோட்டை 1978-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வு துறையின் கட்டுப்பாட்டுக்கு மாறியது.
2002இல் டென்மார்க் ராணியின் ஒத்துழைப்புடன் டென்மார்க் நாட்டில் உள்ள தரங்கம்பாடி நலச்சங்கம் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையுடன் இணைந்து டேனிஷ் கோட்டையை புதுப்பித்தனர். கோட்டையின் உள்ளே அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டனர். கோட்டைக்குள் கடல்நீர் புகாத வண்ணம் மணல் செங்கல் சுண்ணாம்பு தடுப்பு சுவர்களை எழுப்பி டேனிஷ் நேவி கேப்டன் கட்டினார். அந்த தடுப்புச் சுவர் தற்போது கடல்அரிப்பால் சேதமடைந்து வந்தது.
இப்போது புரெவி புயல் காரணமாக கடந்த ஒருவாரமாக கடலில் ஏற்பட்ட சீற்றத்தினால் கடல் அரிப்பு அதிகமாகி கோட்டையின் பிரதான மதில் சுவரை கடல் அலை நெருங்கியுள்ளது. தில்சுவரை சுற்றி முள்வேலியால் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் சேதமடைந்து வருகிறது. இதனால் புகழ்வாய்ந்த டேனிஷ் கோட்டை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலக புகழ்பெற்ற வரலாற்று கட்டடமாக திகழும் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள கோட்டையை கடல்சீற்றம் நெருங்காதவாறு கடற்கரையில் கருங்கல் அலை தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் 120 கோடி ரூபாயில் துறைமுகம் கட்டுமான பணியின்போது அலை தடுப்பு கருங்கல் சுவர் நிவர் புயல் காரணமாக சேதம் அடைந்தது. தற்போது புரெவி புயல் காரணமாக கடல் சீற்றத்தால் கருங்கல் அலை தடுப்புச்சுவர் மீண்டும் சேதமடைந்து வருகிறது. இதனால் துறைமுகம் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.