நாகை அடுத்து நாகூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தர்கா குளத்தின் சுற்றுச்சுவர் கனமழை காரணமாக சேதமடைந்தது. 100 அடி நீளமுள்ள சுற்றுச்சுவர் விரிசல் ஏற்பட்டு சாய்ந்துவிழும் நிலையில் இருப்பதால், குளத்தின் நீர் வெளியேறாத வகையில் நகராட்சி நிர்வாகத்தினர் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தர்கா குளத்தின் சுவர் சேதமடைந்ததை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், நாகை சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி ஆகியோர் இன்று நேரில் ஆய்வுசெய்தனர். அப்போது குளத்தில் உடைப்பு ஏற்படாத வண்ணம் சுவரை தற்காலிகமாகச் சீர்செய்ய அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர், நாகை மாவட்டத்தில் கனமழை அபாய கட்டத்தை நெருங்கியுள்ளது. இதற்குமேல் மழை பெய்தால் குடிசை வீடுகள், பயிர்கள் சேதமடைய வாய்ப்புள்ளது.
அதனால் தாழ்வான பகுதியில் வசிக்கிற மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வந்துசேர வேண்டும் என்றும், கடும் மழை பெய்தால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க:கடற்படை சார்பில் தமிழ்நாடு முழுவதும் பைக் பேரணி!