நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்க மாநில தலைவர் காவிரி தனபாலன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
மத்திய அரசு மூன்று மசோதாக்களை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்துள்ளது. இதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இந்த மசோதாவில் விலைபொருட்களை இருப்பு வைத்து விற்பனை செய்யும் மசோதா மட்டும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தனிநபர் தற்பொழுது குறைந்தபட்ச விளைப் பொருட்களை மட்டுமே இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியும்.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் விளைபொருட்களை எவ்வளவு வேண்டும் என்றாலும் இருப்பு வைத்து கொள்ள முடியும்.
இந்த சட்டத்தால் சிறு, குறு விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக அமையும். கரோனா அச்சுறுத்தல் காலத்தில்கூட வேளாண் சார்ந்த உற்பத்தி மட்டுமே அதிகரித்துள்ளது. நமது நாட்டில் ஏற்கனவே ஒப்பந்த சாகுபடி திட்டம் தோல்வி அடைந்துள்ளது. இந்த நேரத்தில் மீண்டும் ஒப்பந்த பண்ணை முறையை அறிமுகம் செய்வது தேவையில்லாதது.
அரசாங்கம் குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயம் செய்ய வேண்டும். வேளாண் சார்ந்தவை மாநில அரசு பட்டியிலில் உள்ளது. அப்படி இருக்கும் போது மத்திய அரசு எவ்வாறு விலை நிர்ணயம் செய்ய முடியும். எனவே இந்த சட்டத்திற்கு எதிராக எல்லா மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வேண்டும். மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவால் கள்ள சந்தை பெருகும்.
தமிழ்நாடு அரசு மத்திய அரசை சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் உள்ளது. அதனால் மத்திய அரசு கொண்டு வரும் எல்லா சட்டத்தையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தருகிறது. இந்தியா முழுமைக்கும் ஒரே உணவு மண்டலமாக ஏற்கனவே உள்ளது. அப்படி இருக்கும்போது தற்பொழுது எதற்கு இந்த புதிய சட்டம். இதனால் சிறு, குறு விவசாயிகள் தான் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்தள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் விவசாய சங்கங்கள் கலந்துகொண்டு ஆதரவு அளிக்கும்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மைசூர் தேசிய நெடுஞ்சாலையை மறித்த யானைகள் - போக்குவரத்து பாதிப்பு