மயிலாடுதுறை: சீர்காழியை அடுத்த திருவெண்காட்டில் பிரசித்திப் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயில் காசிக்கு இணையான ஆறு கோயில்களில் முதன்மையான திருக்கோயிலாகவும், சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் கொண்ட அகோரமூா்த்தியாக சிவபெருமான் தனி சன்னிதியாகவும் அருள்பாலித்துவருவது சிறப்புக்குரியதாகும்.
மேலும், நவகிரக தலங்களில் கல்வி, தொழில் ஆகியவற்றின் அதிபதியான புதன் பகவானுக்குரிய (புதன் தலமாகவும்) விளங்குகிறது. இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் இந்திரப் பெருவிழா 13 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு இந்திரப் பெருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான 9ஆம் நாள் தேர்த் திருவிழா இன்று (பிப்ரவரி 21) வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்டாலின் மனைவி துர்கா கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தேர்த் திருவிழாவைத் தொடங்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வரர் ஆகிய மூன்று தேர்கள் வீதி உலா தொடங்கின. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துவருகின்றனர். நூற்றுக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்விழாவின் முக்கிய விழாவான தெப்பத்திருவிழா 24ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் அலுவலருக்கு மிரட்டல்: கடம்பூர் ராஜு மீதான வழக்கு ரத்து!