கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெறும் அரசு நிகழ்வொன்றில் கலந்துகொள்ள அங்கு வந்த தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப்பண்பாடுத் துறை அமைச்சர் கே. பாண்டியராஜனை, மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே, காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “கடல்சார் தொல்லியல் துறையை உயிர்ப்பிக்க மத்திய அரசை தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு, இந்தச் சட்டப்பேரவைத் கூட்டத்தொடரில் வெளிவர வாய்ப்புள்ளது.
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுப் பணிகள் குறித்த முழு ஆய்வு அறிக்கையை, ஏற்கனவே மத்திய அரசு இந்திய தொல்லியல் ஆய்வக அலுவலர்களிடம் ஒப்படைத்துள்ளது. இதனை இந்திய தொல்லியல் ஆய்வகம் ஆய்வுசெய்து விரைவில் வெளியிடுவார்கள்.
ஆதிச்சநல்லூரில் மிக விரைவில் அகழ் வைப்பகம் அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்நாட்ட உள்ளனர். அப்போது இந்த அறிக்கையை வெளியிடுவார்கள் என நம்பிக்கை உள்ளது. மத்திய அரசு மிக விரைவில் இந்தப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சார்பில் அழுத்தம் தருவோம்.
உலகின் முதல் மாந்தயினம் தோன்றிய லெமூரியா கண்டம் குறித்த அகழ்வாய்வு நடத்த வேண்டுமென உலகத்தமிழர்கள் பேராவல் கொண்டிருக்கின்றனர். இதனை மத்திய அரசு உடனடியாக செய்ய வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளோம்” எனக் கூறினார்.
இதையும் படிங்க : 'ரஜினி அனைத்தும் அறிந்தவர்; அவர் ஒரு லெஜெண்ட்'