குடகு மலையில் உருவாகும் காவிரி ஆறு பல்லாயிரம் மைல்கள் கடந்து சீர்காழி அடுத்த பூம்புகார் கடலில் சங்கமிப்பது வழக்கம். அதற்கு முன், நாகை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூர் கிராமத்தில் அமைந்துள்ள கடைசி காவிரி ஆற்றின் கதவணைக்கு காவிரி நீர் வந்தடையும்.
காவிரி நீர் இக்கதவணையை வந்தடைந்த பின்னர், தேக்கி வைக்கப்பட்டு ஒவ்வொரு பாசன ஆறுகள் கிளை வாய்க்காலர்களுக்கும், பெருந்தோட்டம் ஏரிக்கும் தண்ணீர் திறக்கப்படுவது நடைமுறை.
இந்நிலையில், ஜுன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காவிரி கடைமடை பகுதியான மேலையூரில் உள்ள கடைசி கதவணைக்கு வந்தடைந்தது. அப்போது அங்கு காத்திருந்த விவசாயிகள், பூஜை செய்து காவிரி நீரை மலர் தூவி வணங்கி வரவேற்றனர்.
மேலும், முறை வைக்காமல் தொடர்ந்து தண்ணீர் வழங்கவும், சம்பா சாகுபடிக்காக உழவு மானிய திட்டத்தை அறிவிக்கவும் தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.