உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா வருகின்ற 29ஆம் தேதி பக்தர்கள் இல்லாமல் எளிமையான முறையில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட எல்லைகளில் பக்தர்கள் வருவதைக் கண்காணிக்க காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு எல்லையான நாகை அடுத்த வாஞ்சூர் சோதனைச்சாவடியில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவி உடை அணிந்து வேளாங்கண்ணி திருவிழாவில் கலந்துகொள்ள 3 பக்தர்கள் 144 தடை உத்தரவை மீறி வருவதை காவலர்கள் கண்டறிந்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், மூவரும் சென்னை பழவந்தாங்கல் நேரு நகரைச் சேர்ந்த நவீன்குமார், சந்தனம், ஆரோக்கியசாமி என்பது தெரியவந்தது.
பின்னர் மூவர் மீதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக வழக்குப்பதிவு செய்த நாகூர் காவல் துறையினர் அவர்களை எச்சரித்து காவல் நிலைய பிணையில் சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பினர்.