நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், '’காவிரிப்படுகையில் 24 எண்ணெய் எரிவாயுக் கிணறுகள் அமைக்க 2013ஆம் ஆண்டு ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் மக்கள் எதிர்ப்பின் காரணமாக கடந்த ஏழு ஆண்டுகளாக கிணறுகளை ஓ.என்.ஜி.சி.யால் அமைக்க முடியவில்லை. தற்போது அதனை அமைக்க கூடுதலாக மூன்று ஆண்டுகளுக்கு கால நீட்டிப்பு வழங்க சுற்றுச்சூழல்துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.
தமிழ்நாட்டில் காவிரி படுகையில் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. காவிரி படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி. கிணறுகளை அமைக்க காலநீட்டிப்பை பெற்றுள்ளது கண்டனத்துக்குறியது.
காவிரி ஆணையம் அமைக்கப்பட்டது போல் தற்போது வேளாண் மண்டலம் பாதுகாப்பு ஆணையம் அமைத்துள்ளார்கள். அதன் தலைவராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளார். உடனடியாக ஆணையம் செயல்பட வேண்டிய தருணம் இது. காவிரிபடுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற சட்டத்தை மதிக்காமல் ஓ.என்.ஜி.சி. எரிவாயு கிணறுகள் அமைக்க முயற்சிக்கிறது. இதற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக மத்திய அரசுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்.
காவிரிப்படுகையில் இந்தத் திட்டத்தில் 24 கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. இதுபோல் 104 கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி. தயாராகி வருகிறது. வேதாந்தா நிறுவனம் ஏலம் எடுத்த பகுதியில் 204 கிணறுகள் அமைக்க திட்டமிட்டுள்ளன. இதன்மூலம் காவிரிப்படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதை தடுத்து நிறுத்தாவிட்டால் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடும்'' என்றார்.
இதையும் படிங்க: நீட் தேர்வை ரத்து செய்க' - அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை!