நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் கழிவுநீர், சாக்கடைகளின் வழியே சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனைத் தடுக்கும் நோக்கத்துடன், கடந்த 2003ஆம் ஆண்டு 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இத்திட்டத்தில் கடந்த ஓராண்டாக பாதாள சாக்கடை குழாய்களில் ஏற்படும் அடைப்பின் காரணமாக, கழிவுநீர் கசிவால் சாலைகளில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்படுவது வாடிக்கையாக மாறிவிட்டது. இதுவரை 11 இடங்களில் பாதாள சாக்கடை குழாய் அடைப்பின் காரணமாக சாலைகளில் பள்ளங்கள் உண்டாகியுள்ளன.
இந்நிலையில், இன்று 12ஆவது முறையாக மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் கண்ணாரத் தெரு பகுதியில் சாலையின் நடுவில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளத்தின் காரணமாக அவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. அடிக்கடி இவ்வாறு ஏற்படும் பள்ளங்களால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பள்ளங்களால் மிகப்பெரிய விபத்து ஏற்படும் முன்னர், விரைவாக பாதாள சாக்கடை திட்டத்தில் ஏற்படும் பழுதுகளை நிரந்தரமாக சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.