மதுரை: சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "தமிழகத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிற கருத்தரங்கில் பங்கேற்பதற்காக மதுரை வந்துள்ளேன். உடனடியாக தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பீகார், கர்நாடகாவில் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடந்துள்ளது.
சென்சஸ் மற்றும் சர்வே இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைத் தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். 1931ஆம் ஆண்டு கடைசியாகக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின் தங்கி உள்ள மக்களைக் கண்டறிந்து அவர்களுக்குச் சிறப்புச் சலுகைகள், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதுதான் உண்மையான சமூக நீதி. அதிகாரம் இருந்தும் எடுக்க மாட்டோம் என்று கை கழுவி விடுவது சமூக நீதிக்கு எதிரான சமூக அநீதி.
சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் சமூக நீதி பற்றி திமுக பேசக் கூடாது. இந்தியா முழுவதும் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. திமுக அரசு தட்டிக் கழிப்பதற்கு என்ன காரணம்?. பின் தங்கிய சமுதாயத்தை முன்னிட்டு தான் உண்மையான சமூக நீதி. இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கும் மேல் கிடையாது என தீர்ப்பு வந்து விட்டால் அதற்கு திமுகவும், அதிமுகவும் தான் காரணம்.
சென்னையில் புயலுக்குப் பிறகு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. பலருக்குப் பால் மற்றும் குடிநீர் கூட கிடைக்கவில்லை. 2015ஆம் ஆண்டு வந்த வெள்ளத்தைப் பார்த்த பிறகும் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. இனிமேலும், கற்றுக்கொள்ளப் போவதில்லை. தமிழக அரசு விலை நிலங்களைக் கைப்பற்றி அதை நாசப்படுத்திக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் 65 சதவீத தொழிற்சாலைகள் சென்னையின் 100 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ளது. சென்னையில் 4 சதவீத ஆக்கிரமிப்புகள் மட்டும் தான் ஏழை எளிய மக்களிடம் உள்ளது. பாக்கி 96 சதவீதத்தை அரசு மற்றும் பெரிய தொழிலதிபர்கள் தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள்.
தமிழகத்தில் 300 ஏரிகள் காணவில்லை. சென்னையில் உள்ள வடிகால் போல இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. ஆனாலும் இந்த சேதங்கள் ஏற்படுவதற்குக் காரணம் திராவிட கட்சிகள் தான். அடுத்த தலைமுறைகளைப் பற்றி இவர்களுக்குக் கவலை இல்லை, அடுத்த தேர்தலைப் பற்றித் தான் சிந்திக்கிறார்கள்.
வெள்ளப் பாதிப்பு தடுப்பு பணிகளுக்கு முதல்வர் 4 ஆயிரம் கோடி செலவிட்டதாகச் சொல்கிறார். ஆனால் அமைச்சர் ஆயிரத்து 900 கோடி தான் செலவிட்டதாகச் சொல்கிறார். முதலில் இதற்கு அவர்கள் வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். சென்னையில் 99 சதவீத நீர் அகற்றப்பட்டு விட்டதாகத் தலைமைச் செயலாளர் சொல்கிறார். ஆனால் அது உண்மை இல்லை.
பலர் இறந்ததாகச் செய்தித்தாள்களில் வருகிறது. ஆனால் அரசு எவ்வளவு பேர் இறந்தார்கள் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை. புயலால் அடுத்துத் தொற்று நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மதுரை வைகை ஆற்றில் ரசாயன கழிவுகள் கலக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் பட்டியலின மக்கள் கொடுமையாகத் தாக்கப்படுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. இதைத் திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதலாக நான் பார்க்கிறேன். இதை அரசு கட்டுப்படுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையில் தொழில்நுட்ப பூங்கா ஆறு ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. ஆனால் அது பற்றாது, இடம் மாற்றி ரிங் ரோடு பகுதியில் இன்னும் பெரியதாக அமைக்க வேண்டும்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பாமக நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம். பாமக சார்பாக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தைச் சென்னை வெள்ளத்திற்காக நாங்கள் கொடுக்கின்றோம்" என்றார்.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் பாதிப்பு - ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் அறிவிப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!