மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில், மேலூருக்கு அருகே உள்ளது நரசிங்கம்பட்டி எனும் சிறிய கிராமம்.பல்வேறு வரலாறுகளைத் தன்னகத்தே கொண்ட சிறப்புமிக்க கிராமமாகும். மதுரை கள்ளழகர் திருக்கோவிலோடு தொடர்புடைய ஆன்மீக சிறப்புமிக்க பூமியாகவும் திகழ்கிறது. இவ்வூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பாரம்பரியமிக்க வீடுகள் இன்றளவும் உயிர்ப்போடு உள்ளன. இதற்குக் காரணம், அந்த வீடுகளுக்குச் சொந்தக்காரர்கள் பல தலைமுறைகளாக இந்த அடையாளத்தைப் போற்றி பேணிக் காத்துவருகின்றனர் என்பதுதான்.
நூறாண்டுகளுக்கு முன்பு கட்டமைக்கப்பட்ட இந்த வீடுகளில் சுமார் ஆறு தலைமுறைகளாக வசித்துவருகின்றனர். மேலும், அங்குள்ள வீட்டுத் திண்ணைகள் கருங்கல்லாலான பட்டியல் கற்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. அதே போன்று படிக்கட்டுகளும் கருங்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. வீட்டிற்குள் காற்று இயல்பாக வந்து செல்லவும், வீட்டினுள் உள்ள வெப்பக்காற்று வெளியேறவும் தோதாக வீட்டின் உள்ளே உள்ள கூடத்தின் மேலே எதிரெதிராக ஜன்னல் அமைத்துள்ளனர்.
இது குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் கூறுகையில், 'நாங்கள் தற்போது வசித்துவரும் இந்த வீடு ஆறு தலைமுறையினர் வாழ்ந்து வருகின்ற பெருமைக்குரியது. பொதுவாக செட்டிநாட்டு வீடுகளைத்தான் பழமைக்கு உதாரணமாகச் சொல்வார்கள். ஆனால் மதுரை மாவட்டத்தில் மேலூருக்கு அருகேயுள்ள எங்களது நரசிங்கம்பட்டியிலும் பல வீடுகள் உள்ளன. அதில் எங்கள் வீடு மிக மிகப் பழமையானது' என்கிறார். இயக்குநர் சசிக்குமார் நடித்த கொடிவீரன் எனும் திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் இந்த வீட்டில்தான் படமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சரவணன் கூறுகையில், தனது பாட்டனார் துரைராஜால் 1922ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட 'டைரி'யை இன்றளவும் பொக்கிஷமாகப் பாதுகாப்பதாகவும், அதிலுள்ள எழுத்துக்களின் மூலமாக அன்றைய காலச் சூழலை புரிந்து கொள்ள முடிகிறது என்றும் பெருமை பொங்க பூரிக்கிறார்.
அதே ஊரைச் சேர்ந்த நாகரத்தினம் என்பவர் கூறுகையில், 'நான் வாக்கப்பட்டுவந்த வீடுஇது. எனக்கு சொந்த ஊர் தேவகோட்டை. அந்தக் காலத்திலிருந்தே இந்த வீட்டை நாங்கள் பழமை மாறாமல் பாதுகாத்து வருகிறோம். எங்கள் வீட்டிற்கு வருகின்ற நபர்கள் அனைவரும், வீட்டின் அழகைப் பார்த்து பெருமை பேசிவிட்டுத்தான் செல்வர்' என்கிறார்.
1929ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக இந்த வீட்டின் வெளிப்புறச் சுவரில் கல்வெட்டுகூட பொறிக்கப்பட்டுள்ளது. வீடுகள் சுண்ணாம்பு, சுர்க்கி, கடுக்காய், முட்டைஓடு மற்றும் அதன் வெள்ளைக்கரு ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளதுடன், தேக்கு மரத்தாலான கட்டைகளைப் பெருமளவு பயன்படுத்தியுள்ளனர். வீட்டின் நிலையின் மேலே கலை நுணுக்கத்துடன் கூடிய சூரியப்பலகை அமைத்துள்ளனர்.
பழமையைப் போற்றிப் பாதுகாப்பதும், அதன் பெருமையை நினைவிற்கொண்டு அடுத்த தலைமுறைக்கு சொல்வதும் இன்று அருகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், மதுரைக்கு அருகேயுள்ள நரசிங்கம்பட்டி கிராமத்தினர் எத்தனை செலவானாலும் தங்களின் பழமையை மறக்காமல் மரபுடன் ஒன்றி வீட்டை போற்றிப் பாதுகாக்கும் பண்பு காண்போரை வியக்க வைக்கிறது.