நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், " தை, அமாவாசையை முன்னிட்டு மதுரை ராமேஸ்வரத்துக்குச் சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டுமெனக் கோரியிருந்தேன். எனது கோரிக்கையை ஏற்று இம்மாதம் 10, 11 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் வழக்கமான கட்டணத்தில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே போல், அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து சென்னை வரும் பயணிகளின் வசதிக்காக வேலூர் கண்டோன்மெண்ட்டிலிருந்து சென்னை கடற்கரை வரை பெரும் தொற்றுக்கு முன்பு ஓடிய சாதாரண பயணிகள் மின் வண்டியை மீண்டும் இயக்க ஜனவரி 23ஆம் தேதி தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். எனது கோரிக்கையின் அடிப்படையில், ஜோலார்பேட்டை - சென்னை விரைவு வண்டியை இயக்க ரயில்வே அனுமதித்துள்ளது, இது அரக்கோணம் சுற்றுவட்டார பயணிகளின் வசதிக்கு உகந்ததாக இருக்கும் எனப் பொதுமேலாளர் பதில் அளித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, தேஜஸ் விரைவு ரயிலைத் திண்டுக்கல்லில் நிறுத்த மறுப்பதற்கான விளக்கம் கேட்டு நான் எழுப்பியிருந்த கேள்வி, இன்று மக்களவையில் வர இருந்த நிலையில் நேற்றே, தேஜஸ் விரைவு ரயில் திண்டுக்கல்லில் நிற்பதற்கான உத்தரவை ரயில்வே நிர்வாகம் பிறப்பித்துள்ளது. மேற்கண்ட எனது மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்றியதற்காகத் தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: விமான நிலையத்தில் புரோக்கர் கைது