மதுரை மாவட்டம், திருப்பாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் குமரவேல் மற்றும் பெருமாள். இவர்கள் இருவரும் 2009ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில், சொத்து பத்திரத்தை கொடுத்து ரூ. 6.50 லட்சம் கடன் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் கடனை முறையாக செலுத்தாததால், வங்கி அலுவலர்கள் அடமானம் வைத்த சொத்தை பறிமுதல் செய்ய நிலையூருக்குச் சென்றனர். அப்போது அந்த சொத்துக்கள் வேறு ஒருவரது பெயரில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது வங்கியின் அனுமதி இல்லாமல், அடகு வைத்த சொத்தை மூன்றாம் நபருக்கு, போலி ஆவணங்கள் தயார் செய்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இருவர் மீதும் நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றப்பிரிவு காவல் துறையினர் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.