அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், நேற்றுமுன்தினம் நடந்த அரசு நிகழ்ச்சியில் அமித் ஷா நேரடியாக எதிர்க்கட்சிகளை விமர்சித்தது பற்றி மதுரை விமான நிலையம் வந்த காங்கிரஸ் மக்களை உறுப்பினர் திருநாவுக்கரசு செய்தியாளர்களிடம் பேசினார்.
அதில், காங்கிரஸ், திமுக ஆட்சியில் திட்டங்கள் எதுவும் தமிழ்நாட்டில் அமல்படுத்தவில்லை என்று அமித்ஷா கூறியது குறித்த கேள்விக்கு
அரசு நிகழ்ச்சியில் அனைத்து அலுவலர்கள் முன்னிலையில் மத்தியில் உள்ள முக்கியமான அமைச்சராக இருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலைச்சர் ஆகியோர் பொதுக்கூட்டங்களில் பேசுவது போல் எதிர்க்கட்சிகளின் பெயர்களை குறிப்பிட்டு பேசுவது அநாகரிகமான செயல். அரசு நிகழ்ச்சியில் இதுபோல் நடந்துகொள்வது தவறு.
மோடி அரசு கடந்த 7 வருடங்களில் என்ன செய்தது? வாஜ்பாய் பிரதமராக இருக்கும் பொழுது 6 வழி, 8 வழிச் சாலைகள் பெயர் சொல்லும் அளவிற்கு செய்தார். மோடி 2 கோடி நபர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக கூறினார். ஒவ்வொருவரும் கணக்கிலும் 15 லட்சம் செலுத்துவதாக கூறினார். இதனை மோடி செய்தாரா என்றால் இல்லை.
தமிழ்நாட்டில் 70 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் அறிவித்துள்ளனர். அனைத்து திட்டங்களும் அடுத்த வருடமே வந்துவிடும் திட்டங்கள் இல்லை. அனைத்து திட்டங்களும் செயல்படுத்துவதற்கு இன்னும் 10 வருடங்கள் ஆகிவிடும். இந்த அரசு நிகழ்ச்சி நான்கு மாதத்தில் வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தலுக்காக நடத்தப்பட்ட நாடக அரசியல் மட்டுமே.
வாரிசு அரசியல் குறித்து அமித்ஷா கூறியது குறித்த கேள்விக்கு,
இந்தியாவில் பாஜக கட்சியில் உள்ள யாருடைய மகனோ, உறவினர்களோ ஆட்சியில் இல்லையா? அரசியலைப் பொறுத்தவரை ஒரு கட்சித் தலைவரின் குடும்பத்திலிருந்து யாரும் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று கூற முடியாது. வாரிசு அரசியல் அனைத்து கட்சிகளிலும் உள்ளது. வாரிசு அரசியலை இந்திய அளவில் மட்டுமில்லை உலக அளவிலும் யாராலும் தடுக்க முடியாது.
கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸில் நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர்கிறது. அப்போது உள்ள அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை மூலமாக எத்தனை இடங்கள் என்பது முடிவு செய்யப்படும். எத்தனை இடங்கள் என்பதை தற்போது கூற முடியாது.
அதிமுக, பாஜக கூட்டணியை அதிமுக தொண்டர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுகவில் சில அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவுடன் கூட்டணி வைப்பதை காட்டிலும் தனியாக போட்டியிடவே விரும்புகிறார்கள்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பலர் ஊழல் வழக்குகளில் சிக்கியிருப்பதால் மத்திய அரசுக்கு பயந்து கூட்டணியில் இணைந்து உள்ளனர். அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மத்திய அரசுடன் கூட்டணியில் இருக்கிறோம் என்று முதன்மையாக இவர்கள் கூறுகின்றனர். அதற்கு காரணம் பயம். இந்த கூட்டணியால் எந்த பயனும் ஏற்படாது. பாஜக அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டதால் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
இதையும் படிங்க: ஏமாற்றத்தில் முடிந்ததா அமித் ஷாவின் சென்னை பயணம்?