மதுரை: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த சிவா என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான எண்ணெய், பருப்பு, காய்கறி, பழங்கள் ஆகியவையின் விலை மிகவும் அதிகமாக உள்ளன. கடந்த 5 ஆண்டுளை ஒப்பிடுகையில், தற்போது, மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
கரோனா நோய் தொற்று ஏற்பட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், நடுத்தர மக்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம், பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. விலை ஏற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை குறைக்க உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தற்போதைய கரோனா சூழ்நிலையில் முகக்கவசம், சனிடைசர் போன்ற பொருள்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறையின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது.
மனுதாரர், மக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்து இது தொடர்பாக மனு அளித்து நிவாரணம் தேடிக் கொள்ளலாம் என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணங்கள் என்ன?