மதுரையைச் சேர்ந்த முகமது ரஸ்வி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் அரசுப் பள்ளியில் பயிலும் 55 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிகப்பட்டவர்களில் 72 விழுக்காடு, சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் தினந்தோறும் 800க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றினால் பாதிப்படைந்து வருகின்றனர்.
கரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழ்நாட்டில் வழிகாட்டு நடைமுறை (SOP) தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், சமீபகாலமாக முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, பொதுக்கூட்டம் ஆகியவற்றில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் மீண்டும் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசியல் கூட்டங்கள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள், பேருந்துகள், ரயில் நிலையங்கள், விமானம் போன்றவற்றில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், அனைத்து அரசியல் கட்சிக் கூட்டங்களிலும் பாகுபாடின்றி முறையாக கரோனா வழிகாட்டு நடைமுறைகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டும் எனக் கருத்து கூறி, தமிழ்நாடு உள்துறைச் செயலர் இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: மழை நீர் சேகரிப்பு பரப்புரையை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி