1981ஆம் ஆண்டு தமிழ்மொழி, பண்பாடு உள்ளிட்ட தமிழ் சார்ந்த பல்வேறுத் துறைகளில் உயர் ஆய்வினை மேற்கொள்ளும் பொருட்டு தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகமானது தமிழறிஞர்கள் வ.அய்.சுப்பிரமணியம், அவ்வை நடராசன், கதிர் மகாதேவன் உள்ளிட்டவர்கள் துணைவேந்தராகப் பணியாற்றியப் பெருமை கொண்டது.
2015ஆம் ஆண்டு துணைவேந்தராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பாஸ்கரன் 2018 ஆகஸ்ட் 5ஆம் தேதியுடன் பணி நிறைவுபெற்று விலகினார். இதனையடுத்து, துணைவேந்தர் தேடல் குழு அமைக்கப்பட்டு 2018 அக்டோபர் 4ஆம் தேதி கோ.பாலசுப்பிரமணியன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 12ஆவது துணைவேந்தராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவரது நியமனத்தில் பல்வேறு விதிமுறை மீறல்கள் இருப்பதாகக் குற்றம்சாட்டி, பேராசிரியர் முனைவர் கே.ரவீந்திரன் போர்க்கொடி தூக்கியுள்ளார். துணைவேந்தர் தேர்வுக்கான விதிமுறைகள் யூஜிசி-யால் வகுக்கப்பட்டுள்ளன.
துணைவேந்தரை நியமிப்பதற்கான விதிமுறைகள்:
- தமிழில் முனைவர் பட்ட ஆய்வும், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் (அ) கல்வி அமைப்புகளில் 20 ஆண்டு ஆசிரியராகவும் (அ) பல்கலைக்கழகத்தில் பத்தாண்டுகளுக்குக் குறையாத அனுபவத்தைக் கொண்ட ஆசிரியராகவும் இருக்க வேண்டும்.
- சர்வதேச அளவில் ஆராய்ச்சிக்கட்டுரைகள் குறைந்த பட்சம் இரண்டு எழுதியிருக்க வேண்டும்.
- பல்கலைக் கழக நல்கைக் குழு பட்டியலிட்டுள்ள ஆய்வேடுகளில் குறைந்த பட்சம் ஐந்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதியிருக்க வேண்டும்.
- அதேபோன்று சர்வதேச அளவிலான ஆராய்ச்சி மாநாடுகள் நடத்தியிருப்பதும் அவசியம்.
இவையணைத்தும் துணைவேந்தர் நியமனத்திற்கான விதிமுறைகளில் ஒன்றாகும் என்கிறார் முனைவர் ரவீந்திரன்.
துணைவேந்தர் பதவி நியமனத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முனைவர் ரவீந்திரன் வழக்குத் தொடுத்துள்ளார்.
இவ்வழக்கை நடத்தி வரும் வழக்குரைஞர் ஷாஜி செல்லன் கூறுகையில், 'துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் நியமனத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதால், அதனை ரத்து செய்துவிட்டு புதிய தேடல் குழு அமைக்கப்பட வேண்டும். முன்னர் அமைக்கப்பட்ட தேடல் குழுவும்கூட விதிகளுக்கு புறம்பானது.
காரணம் தேடல் குழுவில் இருப்போர் குறிப்பிட்ட பல்கலைக் கழகத்திலோ (அ) அதன் உறுப்புக் கல்லூரிகளிலோ எந்தவிதத்திலும் தொடர்பு கொண்டவர்களாக இருக்கக்கூடாது என்பது முக்கியமான நிபந்தனை.
அந்நிபந்தனை மீறப்பட்டுள்ளது என்பதும் ரவீந்திரனின் குற்றச்சாட்டாகும். மேலும், யூஜிசி-யால் நியமிக்கப்பட்ட ஒருவர் தேடல் குழுவில் இருக்க வேண்டும் என்ற விதிமுறையும் மீறப்பட்டுள்ளது.
2019 மார்ச் 6ஆம் தேதி இந்த வழக்கின்முதல் விசாரணை வந்தபோது, நீதிமன்றம் மேலும் சில ஆவணங்களைக் கேட்டிருந்தது. இதன் இரண்டாவது விசாரணை மார்ச் 13ஆம் தேதி நடைபெற்றது.
அதில் பல்வேறு விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். இதனையடுத்து வழக்கை இரண்டு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்வதற்காக நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
முனைவர் ரவீந்திரனைப் பொறுத்தவரை ஏறக்குறைய 12-க்கும் மேற்பட்ட நூல்கள் வரை வெளியிட்டுள்ளார். அந்நூலை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு மாணவர்கள் தங்களின் முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்' என கூறினார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காகக் கடந்த முறை 36 பேர் விண்ணப்பம் செய்தனர். போதுமான தகுதிகளில்லை என்ற அடிப்படையில் 26 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
அதில் 10-க்கும் மேற்பட்டோரின் விண்ணப்பங்கள் சர்வதேச அளவிலான கருத்தரங்குகள் நடத்திய அனுபவமில்லை என்ற காரணத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதே காரணம் தற்போதைய துணைவேந்தர் பாலசுப்பிரமணியனுக்கும் பொருந்தும் எனும்போது, அவரது நியமனம் எவ்வாறு நடைபெற்றது? என பல்வேறு தரப்பிலிருந்தும் கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.
தற்போது இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் விசாரணையில் இருக்கிறது என்றாலும், உரிய நீதி கிடைப்பதுடன், உலகமெல்லாம் வாழ்கின்ற தமிழறிஞர்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்து நிற்கின்ற தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தகுதியான நபர்களால் ஆளப்பட வேண்டும் என்ற விருப்பமும் அவர்களுக்கு மிகுந்திருக்கிறது.