ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள மலையைச் சுற்றி பௌர்ணமிதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
திருப்பரங்குன்றம் மலை சிவ அம்சத்துடன் உள்ளதால், பெளர்ணமிதோறும் திருப்பரங்குன்றத்துக்கு மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலம் செல்லுவார்கள். திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றிவரும் கிரிவலப் பாதை திருப்பரங்குன்றம், தென்பரங்குன்றம் உள்ளிட்ட நகர் பகுதிகளும், நிலையூர், அவனியாபுரம், கூத்தியார்குண்டு கிராமத்துக்குச் செல்லும் வழியாகவும் அமைந்துள்ளது.
கரோனா தொற்று வேகமாகப் பரவிவருவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. அதேபோல் தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதையொட்டி, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் பௌர்ணமியில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடைவிதித்துள்ளது. அதன்படி உள்ளூர் மக்களும் ஊரடங்கைக் கடைப்பிடிக்கும்விதமாக திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் ஆள் நடமாட்டமின்றி காணப்பட்டது.
மேலும் உள்ளூர் மக்கள் யாரும் கிரிவலம் செல்லாமல் இருக்க காவல் துறையினர் அவ்வப்போது வாகனங்கள் மூலம் ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல்: தகவல் தந்தால் சன்மானம்