மதுரை:. இது குறித்து இன்று (ஏப்ரல்.4) அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை மீள்வது குறித்து நான் 20.10.2021 எழுதிய கடிதத்திற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 21.03.2022 அன்று பதில் அளித்துள்ளார்.
2020 - 21இல் ரயில்வே பயணக் கட்டணம், 2019 - 20ஐ ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்குதான் இருந்தது என்று கூறி, எல்லா பிரிவினருக்கும் சலுகை கட்டணம் வழங்குவது சாத்தியமல்ல என்று தெரிவித்துள்ளார். கோவிட் காலத்தில் நிறைய நாட்கள் ரயில்கள் ஓடவில்லை. ஆகவே வருவாய் குறைந்தது எல்லோரும் அறிந்ததே.

அது போல பல குடும்பங்களும் வருவாயை, வேலைகளை இழந்தன. கோவிட் கால நிவாரணமாக மாதம் ரூ. 7500 தாருங்கள் என்ற கோரிக்கையையும் அரசு ஏற்கவில்லை. மூத்த குடிமக்களின் உளவியல் பாடுகள் சொல்லி மாளாது. தாங்கள் சுமையாக கருதப்படக் கூடாது என்ற அவர்களின் உணர்வுகள் மிக முக்கியமானது. அரசாங்கத்திற்கு இதயம் வேண்டும்.

இது போன்ற கட்டண சலுகைகள் அவர்களுக்கு சமூகம் ஆற்றுகிற நன்றிக் கடன் மட்டுமல்ல அவர்களின் உரிமையும் கூட. இன்னும் அவர்கள் தாங்கள் நுகரக் கூடிய ஒவ்வொரு பண்டம், சேவை மீதும் வரி செலுத்துகிறார்கள். வருமான வரி செலுத்துபவர்களும் உண்டு. கடந்த 6 மாதங்களாக முன்பைப் போல ரயில்கள் ஓட ஆரம்பித்தும் விட்டன.

அவர்கள் கை விரலைப் பிடித்து இந்த தேசம் நடந்திருக்கிறது. மூத்த குடிமக்களுக்கான ரயில் சேவை கட்டணம் குறித்த அமைச்சரின் பதில் இரக்கமற்றது. ஆகையால் மறுபரிசீலனை செய்து மீண்டும் கட்டண சலுகையை கொண்டு வர வேண்டும்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.