மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்,
" 2009 ல் மதுரை, திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வரை வெளிப்படையாக அரசியல் கட்சியினர் கொடுத்தனர். 2014 நாடாளுமன்ற தேர்தலின்போதும் வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் கொடுக்கபட்டது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் பணம் தொடர்பாக 3742 வழக்குகள் பதியபட்டு 27 கோடியே 93 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் கைப்பற்றியுள்ளனர்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் பணம் கொடுப்பது,வாங்குவது தொடர்பாக சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது.எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் பணம் பெறுவதும், பணம் கொடுப்பதும் குற்றம் என அதிகளவில் விளம்பரபடுத்த வேண்டும். வாக்காளர்கள் பணம் பெறக்கூடாது, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க கூடாது என விளம்பர பலகைகள் வைக்க வேண்டும். அதிகளவில் கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும்.
தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி எண்களை விளம்பரபடுத்த வேண்டும். அரசியல் கட்சியினர் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ சாலைகளில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பிளக்ஸ் போர்டு வைக்க கூடாது.
தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கபட்டாலோ அல்லது ரத்து செய்யபட்டாலோ காரணமான கட்சியிடம் இருந்து தேர்தல் செலவு பணத்தை திரும்ப பெற வேண்டும் " உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு, தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக பிளக்ஸ், கட்அவுட், பேனர்கள் வைக்கவும், பிரச்சார பொதுகூட்டத்திற்கு லாரி, வேன், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் அதிகளவில் பொதுமக்களை அழைத்துவரவும் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கினை மார்ச் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.