மதுரை மக்களை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கும் கரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக, மதுரையின் முக்கியத்துவம் வாய்ந்த மாட்டுத்தாவணி, பரவை காய்கறிச் சந்தைகளில் மொத்த வியாபாரத்திற்கு மட்டும் அனுமதியளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மதுரை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் பாதுகாப்பாக தங்கு தடையின்றி கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுப்பதற்காக பரவை, மாட்டுத்தாவணி ஆகிய காய்கறிச் சந்தைகளில் மொத்த வியாபாரத்திற்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது. கண்டிப்பாக சில்லறை விற்பனைக்கு அனுமதி கிடையாது. யாரேனும் சில்லறை விற்பனை செய்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்படும்.
மொத்த வியாபாரத்தில் ஈடுபடும் விற்பனையாளர்கள், பணியாளர்கள், சுமை தூக்குபவர்கள் ஆகியோர் முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அவ்வப்போது கழுவவேண்டும். இந்தக் காய்கறிச் சந்தைகளுக்கு கனரக சரக்கு வாகனங்கள் மட்டுமே வர அனுமதிக்கப்படும். இருசக்கர வாகனம் மற்றும் நடந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாது. மேலே குறிப்பிட்டுள்ள கனரக சரக்கு வாகனங்களைத் தவிர்த்து மார்க்கெட்டுக்கு வரும் பிற வாகனங்கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.