மதுரை மாவட்டம் செக்காணூரணியில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறைதீர் திட்ட முகாமில் கலந்துகொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 178 நபர்களுக்கு ரூ.21,49,400 மதிப்புள்ள இலவச பட்டா, வேளாண் உதவித்திட்டம், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் பேட்டியளித்த அவர், "ஜனநாயகத்தில் அவரவர் சொந்தக் கருத்துக்களை தெரிவிக்கலாம். ஒவ்வொரு கருத்துக்களுக்கும் பதில் கருத்து தேவையில்லை" என விஜய் கூறிய கருத்துக்கு பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், "வடகிழக்கு பருவமழை முன்னெச்செரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. வரும் திங்கட்கிழமை இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது.
வடகிழக்கு பருவமழையில் எத்தனை காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி மழைப்பொழிவு உருவாகும் என்றும்; கிடைக்கும் மழைநீரைச் சேமித்து வைத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முதன்முறையாக வெள்ளத்தணிப்பு பணிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு முதல்கட்டமாக வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் ரூ.288 கோடி செலவில் பாலங்கள் அகலப்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.
இதையும் படிங்க: விஜய் அருமையான வார்த்தைகளை உபயோகித்துள்ளார்: கே.எஸ். அழகிரி