மதுரை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க ரவிசந்திரன் தாயார் முதலமைச்சருக்கு மனு அளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து ரவிச்சந்திரனின் தாயார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கொடுத்த பரிசீலனையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசால் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த நவ.11ஆம் தேதி மாலை ரவிச்சந்திரன் பரோலில் வெளிவந்தார்.
இதனையடுத்து, ரவிச்சந்திரன் பலத்த பாதுகாப்புடன் காவல் துறையினர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில் ரவிச்சந்திரன் டிசம்பர் 16ஆம் தேதி மாலை மதுரை மத்திய சிறைக்கு வர இருந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரப்பநாயக்கன்பட்டியில் வசிக்கும் இவரது தாயார் ராஜேஸ்வரியை உடனிருந்து கவனித்துக் கொள்வதற்காக ஒரு மாதம் கூடுதலாக பரோலை நீட்டிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் இன்று (டிச.17) முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தனர்.
அம்மாவை கவனித்துக்கொள்ள பரோல்
இதனையடுத்து, சிறைத்துறை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி ரவிச்சந்திரனுக்கு ஜனவரி 15ஆம் தேதி வரையில் பரோல் வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் 16ஆம் தேதி மதுரை மத்திய சிறைக்கு வர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன் தனது குடும்பத்தினரை விடுத்து மற்ற நபர்களைச் சந்திக்கக் கூடாது, பொதுக் கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.