தமிழ்நாடு வாடகை வாகன உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் நல முன்னேற்ற சங்கத் தலைவர் சந்தோஷம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்," பயணிகளை ஏற்றிச் செல்லும் டாக்சிகள் அனைத்தும் பொதுத்துறை வாகனங்களின் பட்டியலின் கீழ் வருகிறது. பொது பயன்பாட்டுக்குரிய வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்ற விதி அமலாகும். ஆனால் இது தொடர்பாக தமிழக அரசு எந்த அரசாணையும் பிறப்பிக்கவில்லை. இந்நிலையில் மத்திய மோட்டார் சைக்கிள் சட்டத்தில் 2015ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. அந்தத் திருத்தத்தில் 2015 அக்டோபர் 1ஆம் தேதிக்கு பிறகு உற்பத்தி செய்யப்படும் அனைத்து போக்குவரத்து வாகனங்களிலும், வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகள் 80 கிலோ மீட்டர் வேகத்திலேயே செல்லுமாறு, தரச்சான்று பெற்ற வேகக்கட்டுப்பாட்டு கருவியை பொருத்த வேண்டும் என அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழக அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அதில் சில வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர் உட்பட 9 பேர் பயணம் செய்யும் நான்கு சக்கர வாகனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் டிரைவர் உட்பட ஒன்பது பேர் பயணம் செய்யும் டாக்ஸிகளுக்கும் இந்த விதிவிலக்கு பொருந்தும். ஆனால் போக்குவரத்து அதிகாரிகள் டாக்ஸிகளிலும் வேகக்கட்டுப்பாட்டு கருவியை பொருத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் வேகக்கட்டுப்பாட்டு கருவியை வாங்க வலியுறுத்தி வருகின்றனர். இதனால் அனைத்து டாக்ஸி உரிமையாளர்களும் வேகக்கட்டுப்பாட்டு கருவியை வாங்க அந்த நிறுவனத்தை அணுகும்போது அதனை பயன்படுத்தி ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கருவியை 6,500 ரூபாய்க்கு விற்கின்றனர். அதோடு ஒவ்வொரு ஆண்டிலும் வேக கட்டுப்பாட்டு கருவிக்கான தகுதிச்சான்று பெற வேண்டியுள்ளது. அதனை புதுப்பிக்க செல்லும்போது கருவியை வாங்கிய நிறுவனத்திடம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கின்றனர். அவ்வாறு செய்யும்போது புதிய வேகக்கட்டுப்பாட்டு கருவியை வாங்குமாறு அந்நிறுவனம் கட்டாயப்படுத்துகிறது. இதனால் வாகன உரிமையாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
ஆகவே ஓட்டுனர் உட்பட ஒன்பது பேர் பயணம் செய்யும் டாக்ஸிகளில் வேகக்கட்டுப்பாட்டு கருவியை பொருத்த வலியுறுத்தக் கூடாது என இடைக்கால உத்தரவிட வேண்டும். மேலும் 2015 அக்டோபர் 1ஆம் தேதிக்கு முன்பாக உற்பத்தி செய்யப்பட்ட டாக்ஸிகளில் ஏற்கனவே வேகக்கட்டுப்பாட்டு கருவியை பொருத்தியதற்கான சான்றிதழ் அடிப்படையில் தகுதி சான்று வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு, 2015 அக்டோபர் 1ஆம் தேதிக்கு முன்பாக உற்பத்தி செய்யப்பட்ட போக்குவரத்து டாக்ஸிகளில் ஏற்கனவே வேகக்கட்டுப்பாட்டு கருவியை பொருத்தியதற்கான சான்றிதழ் அடிப்படையிலும், அரசாணை அடிப்படையிலும் தகுதி சான்று வழங்க இடைக்கால உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.