மதுரையில் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவின் காவலராக பணியாற்றுபவர் பழனிகுமார். இவரது தொலைபேசி எண்ணிற்கு நேற்று லோகன்டோ செயலி (LOCONTO App) மூலம் பெண்களுடன் இருக்க வேண்டுமா என்ற ஆசை காட்டி குறிப்பிட்ட மொபைல் எண்ணை தொடர்புகொள்ள வேண்டும் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது.
அதுகுறித்து தனிப்படை காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து அந்த மொபைல் எண்ணிற்கு பழனிக்குமார் வாடிக்கையாளர் போல பேசியுள்ளார். அப்போது போனில் பேசியவர் இளம்பெண்களுடன் இருக்க ஒரு மணி நேரத்திற்கு 4 ஆயிரம் எனவும், ஓர் இரவுக்கு 12 ஆயிரம் ரூபாய் எனவும் கட்டணம் குறித்து பேசியுள்ளார்.
இதனையடுத்து கூடல்நகர் பாலத்தின் கீழ் பகுதிக்கு வருமாறு கூறியதை அடுத்து பழனியும் அங்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் இரு சக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர் கூடல்நகர் அருகேயுள்ள அசோக் நகர் 1ஆவது தெருவில் உள்ள வீடு ஒன்றிற்கு அவரை அழைத்து சென்றுள்ளார்.
மேலும் அய்யனார், சேகர், மனோஜ்குமார் ஆகிய மூன்று பேரும் பாலியல் தொழில் குறித்த தகவலை யாரிடமும் சொல்லக்கூடாது, சொன்னால் அரசியல் ரீதியான அதிகார பின்னணி தங்களுக்கு இருப்பதாக கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பின்னர் அறை ஒன்றிற்குள் காவலர் பழனிக்குமாரை அடைத்துவைத்து அந்த அறைக்குள் கர்நாடகாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரையும் அனுப்பிவைத்துள்ளனர். இதனையடுத்து காவலரின் மொபைல் எண்ணின் இருப்பிடத்தை அடையாளம் கண்டு தனிப்பிரிவு காவல் துறையினர் அந்த வீட்டை சுற்றிவளைத்து பாலியல் தொழிலில் இளம்பெண்களை வலுக்கட்டாயமாக ஈடுபடுத்திய மூன்று பேரையும் கையும் களவுமாக கைது செய்தனர். அதையடுத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட இளம்பெண்ணையும் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதிகார பின்னணியுடன் பாலியல் தொழில் கொடிகட்டி பறப்பதால் இந்த தொழிலில் ஈடுபடுபவர்களை கைது செய்வது சவாலாகவே அமைந்துள்ளது என்கின்றனர் காவல் துறையினர்.
இதையும் படிங்க: நீச்சல் வீராங்கனைக்கு பாலியல் தொல்லை..! பயிற்சியாளர் சிக்குகிறார்!