மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "இலவச மற்றும் அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 13 லட்சத்திற்கும் மேல் மாற்றுத்திறனாளிகள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த கல்வி ஆண்டில் இலவச மற்றும் அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்கீழ், பல்வேறு மாவட்டங்களில் ஒரு மாற்றுதிறனாளி மாணவர்கூட தனியார் பள்ளியில் சேர்க்கை நடைபெறவில்லை எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு வேண்டும்
மேலும் பல்வேறு அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான வசதிகள் செய்யப்படவில்லை. எனவே, உயர் நிலைக் குழு அமைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை 2021-2022 ஆண்டு உறுதி செய்ய வேண்டும். மேலும் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் செய்து தரப்பட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவானது நீதிபதி சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், '25 விழுக்காடு தனியார் பள்ளிகளில் சேர்வதற்கு இட ஒதுக்கீட்டிற்காக மாற்றுத்திறனாளிகள் யாரும் பதிவு செய்யவில்லை. எனவே, இந்த மனுவை ஏற்க முடியாது.
மாற்றுத்திறனாளிகள் தரப்பில் மாவட்ட ஆட்சியர்களிடம் கொடுக்கப்படும் கோரிக்கைகள் ஒரு சில மணிநேரத்தில் தீர்வுகள் அளிக்கப்பட்டதாக செய்திகளில் தினந்தோறும் பார்க்கிறோம்.
எனவே, மாற்றுதிறனாளிகள், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள், பின்தங்கிய வகுப்பு மாணவர்கள் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்தால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வழிகாட்டுதலை நீதிமன்றம் கூறுகிறது' எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: புதிய நியாவிலைக் கடை திறக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு!