மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளம் மது தடுப்புப்பிரிவு காவல் துறையினருக்கு சிலைமான், கல்மேடு பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, சிலைமான் காவல் துறையுடன் இணைந்து அப்பகுதியில் சோதனையிட்டபோது, போஸ் என்பவரின் மனைவி தனலட்சுமி(60), அவரது சகோதரன் பாலு(46) ஆகியோர் கல்மேடு, சிலைமான் பகுதிகளில் அவர்களது வீட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 377 மது பாட்டில்கள், 12 ஆயிரத்து 390 ரூபாய் பணத்தைக் கைப்பற்றினர். பின் இருவர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும், சிலைமான், கல்மேடு பகுதியில் பலர், வீட்டில் வைத்து மது விற்பனை செய்வதை தொழிலாக செய்துவருவதாக வந்த தகவலையடுத்து காவல் துறையினர் அப்பகுதி முழுவதும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.