மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியில் அரசியல் கட்சியினர் வீடு வீடாக பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும் படை அலுவலர்களுக்கு பல்வேறு புகார் வந்த வண்ணம் இருந்தன.
அதனடிப்படையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேர்தல் அலுவலர் மலர்விழி தலைமையிலான பறக்கும் படையினர் வீடு வீடாக சோதனை மேற்கொண்டனர். இவர்களைப் பார்த்ததும் பணப்பட்டுவாடா செய்யும் கும்பல் அவர்களிடமிருந்த பணப் பையை சாலையில் வீசி விட்டுத் தப்பியோடியது.
இதையடுத்து, பணப் பையை கைப்பற்றிய பறக்கும் படையினர் அதனை திறந்து பார்த்தபோது வாக்காளர் அடையாள நகல் அடங்கிய படிவமும், ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்ததும் தெரியவந்தது. பின்னர், அதனை அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், தப்பியோடிய கும்பலைத் தீவிரமாக வலைவீசி தேடிவருகின்றனர்.