சென்னை: ''நான் தனியார் பள்ளிக்கூடம் பக்கம் காலைக்கூட வைக்கவில்லை. ஆனால், இன்றைக்கு நான் பேசும் ஆங்கிலத்தில் யாரும் குறை கூறிவிட முடியாது'' என்று ஆ. ராசா மாணவர்கள் மத்தியில் பேசினார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற, பச்சையப்பன் வாசகர் வட்டம் 7ஆம் ஆண்டு நிறைவு விழாவில் திமுக எம்.பி. ஆ. ராசா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர், புதிய கல்விக்கொள்கையை ஏற்காத மாநிலங்களில் வழங்கப்படும் பட்டங்கள் செல்லாது என்று அறிவித்துள்ளனர். தமிழகத்தில் இனி எந்த பட்டத்தாரியும் வரமாட்டன். தொழில்களை பிரித்துக்கொள்வது உலக தத்துவம். ஆனால். இந்துமதம் அதில் தவறு செய்தது. ஒரு சமூகத்தில் யார் வேண்டுமானாலும் எந்த தொழிலை வேண்டுமானாலும் செய்யலாம். அதுதான் தொழில்களை பிரித்துக்கொள்வது. ஆனால், இந்து மதத்தின் பெயரில் தொழில்களை பிறப்போடு பிரித்து வைத்தனர்.
என் தாத்தா படிக்காதவர்.. பிழைப்புத் தேடி இலங்கை ஓடினார். என் அப்பா இலங்கையில் ஆங்கிலம் படித்துவிட்டு இங்கு வந்தார். நான் இன்றைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன். இன்றைக்கு நான் பேசும் ஆங்கிலத்தில் யாரும் குறை கூறிவிட முடியாது. நான் தனியார் பள்ளிக்கூடம் பக்கம் காலைக்கூட வைக்கவில்லை. ஒரு பொட்டைக்காட்டில் உள்ள கல்லூரியில் படித்தேன். இது திராவிடத்தால் எனக்கு கிடைத்தது.
இதையும் படிங்க: 'தமிழ்நாடு அமைதியாக இருக்காது'... துணைவேந்தர்கள் நியமனத்தில் யூ.ஜி.சி.-யின் புதிய விதிக்கு முதல்வர் எதிர்ப்பு!
என் அண்ணன் இந்திய வனத்துறையில் ஓய்வு பெற்ற அதிகாரி. நான் 8வது மகன். அன்று தீண்டாமையாலும், ஏழ்மையாலும் நாட்டை விட்டு ஓடியவர் மகன்கள் நாங்கள். என் மகள் இன்று லண்டனில் சாதி என்றால் என்னவென்றே தெரியாமல் படித்துக்கொண்டு இருக்கிறார். தத்துவம் மீது தலைவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறைய குறைய தத்துவம் தோற்றுவிடும். கம்யூனிசத்தில் கோளாறு இல்லை. கம்யூனிசம் செம்மையானது. ஆனால், அதை முன்னெடுத்த தலைவர்கள் நீர்த்துவிட்டதால், சுய நல வாதிகளாக மாறிவிட்ட காரணத்தால் கம்யூனிச தத்துவங்களும் நீர்த்துவிட்டது.
ஆனால், திராவிடம் அப்படி இல்லை. தத்துவத்தை பெரியார் தந்தார். அண்ணா அதை அரியணையில் ஏற்றினார். அதன் பிறகு கலைஞரும் அவரின் தத்துவங்களை திட்டங்களாக கொண்டு வந்தார். அண்ணா போல ஸ்டாலின் பேசுவாரா? கலைஞர் போல ஸ்டாலின் எழுதுவாரா? என்று கேட்டக்கொண்டு இருந்தவர்கள்.. தற்போது அதை விட்டு விட்டு.. ஸ்டாலின் போல உதயநிதி உழைத்தாரா? என்று கேட்க ஆரம்பித்து விட்டனர்.
எங்கள் தாத்தா சம்பாதித்ததை பத்திரமாக பார்த்துக்கொண்டாலே எங்களுக்கு போதும். இனிமேல் ஒரு பெரியார் எங்களுக்கு தேவையில்லை. சொந்த புத்தி வேண்டாம்.. நான் தந்த புத்தியை வைத்துக்கொள்ளுங்கள் என பெரியார் சொல்லி இருக்கிறார். தத்துவத்தை தரும் தலைவர்கள் இன்றைக்கு இல்லை. ஆனால் தத்துவத்தை காப்பாற்றும் தலைவராக முதல்வர் இருக்கிறார். தத்துவத்திற்கு சேதாரம் இல்லாமல் பார்த்துக்கொள்ளும் இன்னொரு தலைவரும் (உதயநிதி) எங்களுக்கு இருக்கிறார். திராவிடம் தோற்காது'' என்றார்.
மீண்டும் சர்ச்சை?
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஎம் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அண்மையில், ''தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனமா என திமுக அரசை சாடி கேள்வி எழுப்பியது மிகுந்த பரபரப்பை கிளப்பியது. கே.பாலகிருஷ்ணனின் இந்த பேச்சை திமுகவின் அதிகார்பூர்வ நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்திருந்தது. இந்த நிலையில் ஆ. ராசா கம்யூனிசத்தை முன்னெடுத்தவர்கள் சுய நல வாதிகளாக மாறிவிட்டார்கள் என்று பேசியிருப்பது மீண்டும் விவாதத்தை கிளப்புவதாக உள்ளது.