சென்னை: அதிமுக தொடர்ந்து தேர்தல்களில் தோல்வி அடைந்து வருவதற்கு ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று அடம் பிடித்து ஏற்றுக் கொண்டவர்கள் தான் என முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலை மாநில உயர்கல்வி மன்றத்தில் உள்ள ஜெயலலிதா உருவ சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் கூறியதாவது:

கட்சியில் ஏற்பட்ட சோதனைகளை வென்று யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக மாற்றி வரலாற்றில் தனக்கென தனி இடம் பிடித்த நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா. அவர் பல்வேறு மக்கள் நல திட்டங்களை இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக மாநில வருவாயில் இருந்து 52 சதவீத நிதியை ஏழை மக்களுக்கு உதவ பயன்படுத்தியவர். தமிழ்நாட்டில் நல்லாட்சியை நடத்தினார் என்பது தான் வரலாறு.
ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவை உச்சாணிக்கொம்பில் வைத்திருந்தவர். அதற்குப் பின்னால் நடைபெற்ற அரசியல், சூது, சூழ்ச்சி, வஞ்சனை, நம்பிக்கை துரோகம் இவைகள் எல்லாம் யாரால் நிறைவேற்றப்பட்டது என்பது பற்றி எல்லோருக்கும் தெரியும். ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் அதிமுக தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று அடம் பிடித்து ஏற்றுக் கொண்டவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
தமிழக சட்டமன்றத்தில் மக்கள் விரும்புவது இரு மொழிக் கொள்கை தான் என்று அறிஞர் அண்ணா தீர்மானம் நிறைவேற்றினார். எம்ஜிஆரும் இதே போன்று தீர்மானம் நிறைவேற்றினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் இதை தான் சொன்னார். நான் முதலமைச்சராக இருந்த போது சட்டமன்றத்தில் மிகப்பெரிய விளக்கத்தை கொடுத்து இருமொழிக் கொள்கை தான் என்று உறுதிபட சொல்லி உள்ளேன். மாநில நிதி என்றாலும் மத்திய அரசு நிதி என்றாலும் அது மக்களின் வரிப்பணம் என்றார்.
மேலும், அதிமுக ஒன்றிணைவது தொடர்பான கேள்விக்கு, "கண்ணுக்குத் தெரியாத ஒரு மாயை அடிப்படையில் இருக்கலாம். இது தொண்டர்கள் இயக்கம். தொண்டர்களின் எண்ணமும் அதிமுக இணைய வேண்டும் என்பது தான். தொண்டர்களின் அந்த எண்ணம் நிறைவேற வேண்டும் என்று தான் தர்மயுத்தம் நடத்தி வருகிறோம். நமது தாய்மொழி தமிழ். விருப்பப்பட்டவர்கள் எந்த மொழி வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம் எழுதிக் கொள்ளலாம். தாய் மொழியை காப்பாற்ற வேண்டிய கடமை தமிழர்களுக்கு உள்ளது" என்றார்.