வேலூர்: அமைச்சர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்திற்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனை தொடங்கியது. இதனையடுத்து, மூன்றாவது நாளாக நேற்று முன்தினம் ஜனவரி 05 ஆம் தேதியுடன், 44 மணிநேர சோதனையை முடித்துக்கொண்டு அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்ற நிலையில், தற்போது அதிரடியாக இன்று மீண்டும் கிங்ஸ்டன் கல்லூரியில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீண்டும் கிங்ஸ்டன் கல்லூரியில் சோதனை:
அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் இன்று (ஜனவரி 07) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த முறை 9 கார்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை புரிந்து சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது ஒரு காரில் அதிகாரிகள் வந்து சோதனை செய்து வருகின்றனர்.
மேலும், சிஆர்பிஎஃப் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே, கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, இன்று மீண்டும் சோதனை நடைபெறுவதாக அமலாக்கத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகனும் வேலூர் தொகுதி எம்பியுமான கதிர் ஆனந்த்திற்கு சொந்தமான, கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் வேலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துறை அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோனில் அமலாக்கத்துறை அதிகாரிகள், சிஆர்பிஎஃப் போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 3 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: கிங்ஸ்டன் கல்லூரியில் சிக்கிய முக்கிய ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டதா? வெளியேறிய கார்!
இதில், அமைச்சர் துரைமுருகன் வீட்டில் எந்த ஆவணங்களும் கிடைக்காத நிலையில், கடைசியாக கிங்ஸ்டன் கல்லூரியில், நேற்று முன்தினம் (ஜனவரி 05) ஞாயிற்றுக்கிழமை வரை நடந்த 44 மணிநேர சோதனையை முடித்துவிட்டு, 9 கார்களில் 35 அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்கள் மற்றும் பணத்துடன் வெளியே சென்றதாக தகவல் கிடைத்தது.
இதில் குறிப்பாக சோதனைக்கு இடையே அதிகாரிகள் சுத்தியல், உளி, பெரிய கடப்பாரை ஆகியவற்றை கொண்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. அமலக்கத்துறை சோதனைக்கு இடையில் அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றிருந்த நிலையில், “துறை ரீதியான வேலைக்காக டெல்லி சென்றிருந்தேன். அமலாக்கத்துறை சோதனைக்கும் நான் டெல்லி சென்றதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று துரைமுருகன் நேற்று விளக்கம் அளித்திருந்தார்.