மதுரை: மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வைகை அணையை தூர்வார கோரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை கடந்த 1958ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதுநாள்வரை வைகை அணை தூர்வாரப்படவில்லை. இதனால், வைகை அணையில் அடித்து வரப்பட்ட மணல்கள் சுமார் 20 அடிவரை உள்ளது. இதனால் தண்ணீர் கொள்ளளவு குறைந்து வருகிறது.
அரசு அறிவிப்பு
வைகை அணை தூர்வாரப்படும் என்று அவ்வப்போது அரசு அறிவித்து, இதுவரை 800 கோடி ரூபாய்வரை திட்ட மதிப்பீடு செய்துள்ளது. ஆனால் இவை அனைத்தும் அறிவிப்பாகவே உள்ளது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வைகை அணையின் நீர் பிடிப்பை நம்பி மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்பட ஐந்து மாவட்டங்கள் உள்ளன.
வைகை அணைக்கு வரும் நீர்வரத்து பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் சக்தி வாய்ந்த மின் மோட்டார்கள் பொருத்தி தண்ணீர் திருடப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் வைகை ஆற்றில் இருந்து நீர் நகர்புறங்களில் வரும்போது கழிவுநீர் கலப்பதால் தொற்று பரவுகிறது.
ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்
எனவே வைகை அணையை முழுமையாக தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் திருட்டை தடுத்து முழுமையாக கண்காணிக்க உத்தரவிட வேண்டும்" என தெரிவித்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி துரைசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு
அப்போது நீதிபதிகள், மனு குறித்து 3 வாரத்திற்குள் பொதுப்பணித்துறை செயலர் மற்றும் தேனி, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஐந்து வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: "G" என்ற அடையாளத்துடன் கூடிய வாகனங்கள் கண்காணிப்பு