தூத்துக்குடி மாவட்டம் சேரகுளத்தைச் சேர்ந்த சங்கரசுப்பிரமணியன், நாங்குநேரி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"நாங்குநேரி தொகுதியில் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் முகாமிட்டுள்ளனர். அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் தலா 2 ஆயிரம் வழங்க அதிமுகவினர் முடிவு செய்துள்ளனர். இவர்களை தொகுதியில் இருந்து வெளியேற்ற தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், தொகுதியில் 20 கோடி ரூபாய் வரை பணப்பட்டுவாடா நடந்துள்ளது. எனவே நாங்குநேரி இடைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து, தேர்தலை அக்டோபர் 21க்கு பிறகு நடத்த உத்தரவிட வேண்டும். தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் போதிய பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதுடன், வீடியோ பதிவும் செய்யப்படுகிறது. மேலும் ரூ.19 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், தேர்தல் அறிவித்த பின் தேர்தல் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என தெரிவித்தனர்.
மேலும், வழக்கு தொடர்ந்த சுயேட்சை வேட்பாளர் சங்கர சுப்பிரமணியன், குறிப்பிட்டுள்ள பணப்பட்டுவாடா, தேர்தல் வாக்கு இயந்திரங்களை மாற்றியது குறித்து தேர்தல் ஆணையம், தேர்தல் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
வாக்காளர்களுக்கு வாரி இறைக்க பல லட்சம் ரூபாய்... நாங்குநேரியில் பரபரப்பு!