சிவகங்கை மாவட்டம் ஆலடி நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், “எங்கள் ஊரிலுள்ள ஸ்ரீஇரணவீரன் சுவாமி இராக்காயி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலைப் புதுப்பித்துள்ளோம். தற்போது கோயிலின் குடமுழுக்கு விழா நடத்த கிராமத்தினர் முடிவுசெய்து நாளை குடமுழுக்கு நடத்தப்படவிருக்கிறது.
இந்நிலையில் எங்கள் பகுதியைச் சேர்ந்த சிலர் திட்டமிட்டு குடமுழுக்கு விழ நடத்துவதில் பிரச்னை செய்துவருகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர், சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் இருதரபப்பினரையும் வைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் உரிய முடிவு ஏற்படவில்லை.
எனவே கோயிலின் குடமுழுக்கு விழா, சிறப்புப் பூஜைகள் நடத்த அனுமதியளித்தும், விழா அமைதியாக நடைபெற காவல் துறை பாதுகாப்பு வழங்கி உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை அவசர வழக்காக எடுத்துக்கொண்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கோயில் குடமுழுக்கு விழா நாளை நடத்த அனுமதி வழங்கியும், அதற்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல் துறை ஆய்வாளருக்கு உத்தரவிட்டும் வழக்கை முடித்துவைத்தார்.
இதையும் படிங்க: தாய் கழகம் திரும்பிய கவுன்சிலர் - சின்னமனூர் ஒன்றியத்தைக் கைப்பற்றிய திமுக