தமிழ்நாடு தட்டச்சு, சுருக்கெழுத்து, கணினி பள்ளிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் சோம.சங்கர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அதில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 மாதத்துக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தட்டச்சு, கணினி பள்ளிகள் செயல்படாமல் உள்ளன. தற்போது நீதித்துறை உள்ளிட்டமுக்கியமான துறைகளில் தட்டச்சு பணிகள் அவசியம். ஆனால், எங்கள் பள்ளிகள் செயல்பட இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் எங்கள் சங்கத்தினர் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகிறோம்.சின்னத்திரை படப்பிடிப்புக்கு கூட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோல பல்வேறு துறைகளிலும் பணியாற்றுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாங்கள் எங்கள் பள்ளிகளை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இயக்குவதற்கு அனுமதிக்க வேண்டும். ஏற்கனவே கடந்த 2 மாதமாக எங்கள் பள்ளிகள் பூட்டப்பட்டு இருப்பதால், நடைமுறைச் சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளோம். உடனடியாக எங்கள் பள்ளியை திறக்க அனுமதி வழங்க வேண்டும். ஏற்கனவே இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம்.எங்கள் மனுவை பரிசீலித்து எங்கள் பள்ளிகளை திறக்க அனுமதித்து உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.