மதுரை: சென்னை பல்லாவரம் எம்.எல்.ஏ-வின் மகன் மற்றும் மருமகள் 17 வயது சிறுமியை கொடுமைபடுத்தியதாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை, நரிமேடு பகுதியில் உள்ள எவிடென்ஸ் அமைப்பு அலுவலகத்தில் இன்று (ஜன.19) செய்தியாளர்களைச் சந்தித்து எவிடென்ஸ் கதிர் பேசினார்.
அப்போது, "பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ மகன் - மருமகள் வீட்டிற்கு ஏஜெண்ட் மூலமாக மாதம் 16 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் 17 வயதிலேயே சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர். வேலைக்கு சேர்ந்த இரண்டாவது நாளிலேயே அந்த சிறுமியைத் தாக்க தொடங்கியுள்ளனர். மூன்று வேளையும் சமைத்து தர வேண்டும் எனக் கூறி, பல்வேறு பொருட்களை வைத்து கொடூரமாக தாக்கி, கையில் சூடு வைத்து மிளகாய்ப்பொடியை கரைத்து முகத்தில் ஊற்றி கொடுமை செய்துள்ளனர்.
சமூகநீதி, பெண்கள் நலன் பேசும் திமுகவினர், பெண் குழந்தையை வீட்டில் வைத்து அடித்து கொடுமைபடுத்தியுள்ளனர். இப்போது கேட்டால் மகன் செய்தது எனக்கு தெரியாது எனக் கூறுகிறார் எம்எல்ஏ. இவர் எதற்கு அரசியலில் இருக்கிறார்? சிறுமியை எம்.எல்.ஏவின் மகன், மருமகள் கழிவறையில் உடமைகளை வைத்து தங்க வைத்துள்ளனர்.
நீயும் நானும் ஒன்னா என சாதி ரீதியாக கேட்டு, ரேசன் அரிசியை சமைக்க வைத்து தனி சாப்பாடு மட்டும் சாப்பிட வைத்து கொடுமை செய்துள்ளனர். நீட் தேர்வு எழுதி படிப்பதற்கான கல்விச் செலவுக்காக வேலைக்கு வந்த பெண்ணை கொடுமை செய்துள்ளனர். சிறுமியை வீட்டிற்குள் பூட்டி வைத்து அடைத்து, செல்போனை பறித்து வைத்துள்ளனர். அவர்களுடைய குழந்தையை சிரிக்க வைப்பதற்காக சிறுமியை ஆட வைத்து கொடுமைபடுத்தியுள்ளனர்.
எம்எல்ஏவின் மருமகளும், மகனும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி எதையும் வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளனர். கையில் சூடு வைத்த காயம் தெரியக்கூடாது என்பதற்காக மருதாணி போட்டு மறைத்துள்ளனர். காவல்துறையினருக்கு FIR பதிவு செய்யவிடாமல் தடுத்து நிறுத்தினர். வன்முறையை செய்துவிட்டு, வாகனங்களில் வந்து ஊர்க்காரர்களை மிரட்டியுள்ளனர். இது சிறுமிக்கு நடந்த மோசமான, கொடூரமான வன்கொடுமை. இது தொடர்பாக இப்போதுதான் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சுமார் மூன்றரை மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். மாணவியின் மருத்துவக் கனவை நிறைவேற்ற வேண்டும், மாதம்தோறும் 15 ஆயிரம் சிறுமிக்கு வழங்க வேண்டும், இருவரையும் கைது செய்ய வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை பிணை கொடுக்கக் கூடாது. இது தமிழகத்திற்கு பெரும் அவமானம். நீட்டைப் பற்றி பேச தமிழக அரசுக்கு என்ன தகுதி இருக்கிறது? முதலமைச்சர் ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது என அறிக்கை கூட விடவில்லை.
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் பொறுப்பு ஏற்க வேண்டும். 3 ஆண்டுகளில் எடுத்த அனைத்து வன்கொடுமை வழக்குகள் மீதும் சந்தேகம் எழுகிறது, சிறுமிக்கு இவ்வளவு பெரிய சித்ரவதை நடைபெற்றுள்ளது. 17 வயது சிறுமியை எப்படி வீட்டு வேலைக்கு சேர்த்தார்கள்? ஒரு ரூபாய் கூட சம்பளம் தராமல் கொடுமை செய்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு தனி விண்வெளி மையம் - அடுத்த ஆண்டு பாரதிய விண்வெளி மைய பணி துவக்கம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்!