மதுரை: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்த். இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், "திருநெல்வேலி - மதுரை இடையே உள்ள நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில், மூன்று சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன.
இதில் திருநெல்வேலியிலிருந்து மதுரை செல்ல ஒரு வழி கட்டணமாக ரூ.275 வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்தும், பாலங்கள் பராமரிப்பு வேலைகளும் நடைபெறுகின்றன.
சுங்கச்சாவடி கட்டண வரி வசூல் நிறுத்தம்?
நெடுஞ்சாலை ஓரங்களில் வெள்ளை கோடு, ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஆகியன ஒட்டப்படாததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதன் காரணமாக அதிகப்படியான விபத்துக்கள் நிகழ்கின்றன. சாலைகள் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பல கிலோமீட்டர் தூரத்துக்கு நான்கு வழிச்சாலையானது, இரண்டு வழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறும்வரை, சுங்கச்சாவடிகளில் வரி வசூல் செய்வதை நிறுத்திவைக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவானது நீதிபதிகள் புஷ்பா சத்ய நாராயணா, வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (நவம்பர் 22) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து இரண்டு வாரத்திற்குள் தேசிய நெடுச்சாலைத் துறை தலைவர் முறையாகப் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டனர். பதில்மனு தாக்கல்செய்யத் தவறினால் சுங்கச்சாவடி வரி வசூலிப்பை நிறுத்த நேரிடும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கிய சசிகலா!